ECONOMY

பொது போக்குவரத்து பெருந்திட்டத்தின் கீழ் 12 இரயில் தடங்களை நிர்மாணிக்க மாநில அரசு திட்டம்

28 ஜூலை 2022, 7:48 AM
பொது போக்குவரத்து பெருந்திட்டத்தின் கீழ் 12 இரயில் தடங்களை நிர்மாணிக்க மாநில அரசு திட்டம்

ஷா ஆலம், ஜூலை 28- இரயில் தடங்களை அடிப்படையாக கொண்ட 12 போக்குவரத்து வசதிகளை அடையாளம் காண்பதற்காக சிலாங்கூர் பொது போக்குவரத்து பெருந்திட்டத்தை மாநில அரசு தயாரித்துள்ளது.

எனினும், மாநில அரசு சமர்ப்பித்த இந்த பரிந்துரை தொடர்பில் மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இதன் தொடர்பான பரிந்துரை மற்றும் பெருந்திட்டத்தை 12வது மலேசியத் திட்டம் வாயிலாக நாங்கள் மத்திய அரசிடம் சமர்ப்பித்து விட்டோம். எனினும் அத்தரப்பிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

பண்டார் பாரு செலாயாங்கில் எம்.ஆர்.டி மற்றும் எல்.ஆர்.டி. இரயில் திட்டங்களை அமல்படுத்துவது குறித்து தாமான் டெம்ப்ளர் உறுப்பினர் சானி ஹம்சான் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

எம்.ஆர்.டி. எல்.ஆர்.டி மற்றும் கொம்யூட்டர் எனப்படும் பயணிகள் இரயில் சேவையை பஸ்கள் மூலம் இணைக்கக்கூடிய வசதியை பண்டார் பாரு செலாயாங் பெற்றுள்ளதாக இங் ஸீ ஹான் சொன்னார்.

பொது போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது அதிக செலவு பிடிக்கக்கூடியதாகவும் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டதாகவும் உள்ளதால் மாநில அரசு நிலையில் எல்.ஆர்.டி., எம்.ஆர்.டி. மற்றும் கொம்யூட்டர் சேவைகளை பண்டார் பாரு செலாயாங்கில் ஏற்படுத்துவதற்கான விண்ணப்பம் எதுவும் பெறப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மாநில அரசு உருவாக்கியுள்ள பொது போக்குவரத்து பெருந்திட்டத்தின் வாயிலாக தற்போது 20 விழுக்காடாக இருக்கும் பொது போக்குவரத்து பயன்பாட்டை வரும் 2030 ஆம் ஆண்டுவாக்கில் 60 விழுக்காடாக உயர்த்த முடியும் என்று மந்திரி புசார் கடந்த ஏப்ரல் மாதம் கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.