ஷா ஆலம், ஜூலை 28- இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் லைசென்ஸ் இன்றி செயல்படும் ஆலோங் எனப்படும் வட்டி முதலைகளிடம் 506 பேர் 42 லட்சத்து 80 வெள்ளியை பறிகொடுத்துள்ளனர்.
ஜோகூர் மாநிலத்தில் மிக அதிகமாக அதாவது 86 மோசடி சம்பவங்கள் பதிவானதாக உள்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் முகமது சைட் கூறினார்.
இத்தகைய நடவடிக்கைகளை துடைத்தொழிக்க சட்ட அமலாக்கம், கைது மற்றும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை இத்தகைய குற்றங்களுக்காக 744 பேர் கைது செய்யப்பட்டதோடு 241 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது என்று மக்களவையில் அவர் தெரிவித்தார்.
கடந்த 2017 முதல் கடந்த ஜூன் மாதம் வரை 300 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட 89,798 இணைய மோசடிகள் நாட்டில் பதிவு செய்யப்பட்ட தகவலையும் துணையமைச்சர் வெளியிட்டார்.


