கோலாலம்பூர், ஜூலை 22- பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்ட மசோதா 2021 கடந்த புதன் கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத் தொடர் தொடங்கிய முதல் வாரத்திலேயே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் அவையில் புதிய வரலாறும் படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டில் முதன் முறையாக முன்மொழியப்பட்ட இந்த மசோதா நாட்டில் பாலியில் வன்கொடுமை பிரச்னைகளுக்கு தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுநாள் இந்த இக்குற்றங்களுக்கு எதிராக பிரத்தியேகச் சட்டங்கள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த மசோதா மீதான விவாதத்தின் போது பெரும் சலசலப்பு ஏற்பட்டதையும் காண முடிந்தது. பாசீர் சாலாக் உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜூடின் அப்துல் ரஹ்மான் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்ததாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
இதுதவிர மற்றொரு சலசலப்பும் மக்களவையில் கடந்த 18ஆம் தேதி ஏற்பட்டது.
சபாநாயகரின் உத்தரவையும் மீறி சுலு தரப்பினரின் சபா மீதான கோரிக்கை தொடர்பில் விவாதிப்பதற்கு ஏதுவாக தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோத்தா பெலுட் உறுப்பினர் இஸ்னாராய்சா முனிரா அவையை தொடர்ந்து வலியுறுத்தியதால் அவர் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதோடு இரண்டு நாட்களுக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததைத் தொடர்ந்து, சுலு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிப்பது இவ்வழக்கு தொடர்பான மலேசியாவின் சட்ட நடவடிக்கைகளுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்று மக்களவை சபநாயகர் டத்தோஸ்ரீ அஸார் அஜிசான் விளக்கினார்.


