கோலாலம்பூர், ஜூலை 22 - இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்தே உலகின் கச்சா பாமாயில் விலை மிக உயர்ந்த மட்டத்தில் இருந்து குறைந்து வரும் நிலையில், அதற்கு இணையாக சமையல் எண்ணெயின் விலையைக் குறைக்கும்படி உள்நாட்டு தொழில் துறையினர் வலியுறுத்தப் பட்டுள்ளனர்.
கச்சா பாமாயில் விலைக்கு ஏற்ப சமையல் எண்ணெய் விலையும், உலக சந்தையில் விலை ஏறுவதும் குறைவதும் கொள்கையளவில் மாறும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
"எனவே, தொழில்துறையினர் சில்லறை பாமாயில் எண்ணெய் விற்பனை மட்டத்தில் பொருத்தமான விலையை நிர்ணயிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்த வாரம் கச்சா பாமாயில் எண்ணெய் விலை டன்னுக்கு 7,000 ரிங்கிட்டிலிருந்து 3,600 ரிங்கிட்டாக குறைந்துள்ளதாகவும், நாட்டில் பாட்டிலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் விலையும் விரைவில் குறையும் என்றும் நந்தா நேற்று தெரிவித்திருந்தார்.


