ஷா ஆலம், ஜூலை 22- கெஅடிலான் மத்திய தலைமைத்துவ மன்றத்தில் நியமன உறுப்பினர்கள் உள்பட மகளிரின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளதை கட்சி மகளிர்ப் பிரிவின் புதிய துணைத் தலைவி ஜூய்ரியா ஜூல்கிப்ளி வரவேற்றுள்ளார்.
மத்திய தலைமைத்துவ மன்றத்தில் (எம்.பி.பி.) 10 பேர் அல்லது 27 விழுக்காட்டினர் தேர்வு பெற்றுள்ள வேளையில் நியமனப் பதவியில் இரு பெண்களுக்கு அதாவது நுருள் இஸா அன்வார் மற்று சரஸ்வதி கந்தசாமி ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
கெஅடிலான் கட்சி வரலாற்றில் முதன் முறையாக இரு பெண்களை உதவித் தலைவர் பதவிக்கு நியமிக்கும் தைரியமான முடிவை கட்சித் தலைமைத்துவம் ஆக்ககரமான முறையில் மேற்கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
கட்சியின் அடிமட்ட நிலையில் மட்டுமின்றி உயர்மட்ட அளவிலும் மகளிருக்கு உரிய வாய்ப்பினை அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நியமனம் அமைகிறது என்று அவர் குறப்பிட்டார்.


