ஷா ஆலம், ஜூலை 22- நிலைத்தன்மையற்ற நடப்பு பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு சிலாங்கூரில் மதிப்பீட்டு வரியை உயர்த்துவதில்லை என்று மாநில ஆட்சிக்குழு முடிவு செய்துள்ளது.
இம்மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தில் இதன் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
அண்மைய காலமாக அதிகரித்து வரும் பொருள் விலையேற்றம் மற்றும் பண வீக்கத்தை கருத்தில் கொண்டு இம்முடிவினை மாநில அரசு எடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேம்பாட்டுத் திட்டங்கள், மனிதவள மேம்பாடு மற்றும் முதலீட்டு ஈர்ப்பு நடவடிக்கைகள் வாயிலாக பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் என்று அவர் சொன்னார்.
பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்கும் மக்களின் நீடித்த மற்றும் சுபிட்சமான வாழ்க்கை முறையை உறுதி செய்வதற்கும் ஏதுவாக மாநில அரசு முதல் சிலாங்கூர் திட்டத்தை (ஆர்.எஸ்.-1) வரைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 10 கோடியே 80 லட்சம் வெள்ளி நிதியின் வாயிலாக குறைந்த வருமானம் பெறும் 30,000 குடும்பங்கள் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்றும் அவர் சொன்னார்.
மதிப்பீட்டு வரியை மறுஆய்வு செய்வது தொடர்பில் ஊராட்சி மன்றங்கள் எடுக்கும் எந்த முடிவும் மாநில மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


