ஈப்போ, ஜூலை 22- நிறுவனம் ஒன்றின் முன்னாள் இயக்குநருக்கு எதிராக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி பண மோசடி மற்றும் போலி காசோலைகளைப் பயன்படுத்தியது தொடர்பில் 64 குற்றச்சாட்டுகள் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டன.
நீதிபதி அய்னுள் ஷாரின் முகமது முன்னிலையில் தமக்கெதிராக கொண்டு வரப்பட்ட இக்குற்றச்சாட்டுகளை ஊய் யீ லிங் (வயது 46) என்ற அந்த மாது மறுத்து விசாரணை கோரினார்.
அவருக்கு எதிராக தண்டனைச் சட்டத்தின் 403,467,471 மற்றும் 467 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அதே நீதிமன்றத்தில் நிறுவன முன்னாள் ஆலோசகரான யீ யாட் காய் (வயது 64) என்பவருடன் சேர்த்து தண்டனைச் சட்டத்தின் 467,471/467 பிரிவுகளின் கீழூம் அவர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி முதல் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இங்குள்ள சில வங்கிகளில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சான் சீ செங் என்பவருக்கு சொந்தமான காசோலையை தனது சொந்த நோக்கத்திற்கு பயன்படுத்தியது தொடர்பில் ஊய் மீது தண்டனைச் சட்டத்தின் 403வது பிரிவின் கீழ் இரு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு ஆறு மாதம் முதல் ஐந்தாண்டு வரையிலான சிறைத்தண்டனை, பிரம்படி, மற்றும் அபராதம் விதிக்கப்படும்.


