ஷா ஆலம், ஜூலை 22- சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் ஜூலை 25 முதல் ஆகஸ்டு 5 வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரை டிவி சிலாங்கூர் தினமும் காலை 9.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யும்.
அவையின் விவாதங்களை பொது மக்கள் பேஸ்புக் மீடியா சிலாங்கூர், சிலாங்கூர் அகப்பக்கம், சிலாங்கூர் ஜெர்னல், மாண்டரின் மற்றும் தமிழ் இணைய ஏடுகள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.
மாநில அரசின் வரலாற்றுப்பூர்வ நிகழ்வான முதல் சிலாங்கூர் திட்டம் காலை மணி 11.00க்கு தாக்கல் செய்யப்படும். அடுத்த ஐந்தாண்டுகளில் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் மக்கள் நலனை மேம்படுத்துவதை இலக்காக கொண்ட இத்திட்டம் இம்முறை சட்டமன்றக் கூட்டத்தின் கவனத்தை ஈர்க்கும் அங்கமாக விளங்கும்.
இந்த கூட்டத் தொடரின் போது விவாதத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் பொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள முயற்சிகள், விளையாட்டு வசதிகள், பேரிடரை எதிர்கொள்வதற்கான தயார் நிலை மற்றும் சுற்றுச்சூழல் குறித்து பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, சுகாதாரம், பருவநிலை மாற்றம், சட்டவிரோதமாக குப்பை கொட்டும் நடவடிக்கை, மக்கள் நலன் காக்கும் திட்டங்கள் போன்றவையும் உறுப்பினர்களின் விவாதத்தில் முக்கிய இடம் பெறும்.


