ஈப்போ, ஜூலை 22- இங்குள்ள பாசீர் பூத்தே, ஜாலான் தாமான் ஷான்தினில் நேற்று மாலை ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று வீடுகள் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் இளம் பெண் ஒருவர் மூச்சுத் திணறலுக்குள்ளாகி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
இத்தீவிபத்து குறித்த தகவல் நேற்று மாலை 4.00 மணியளவில் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து பாசீர் பூத்தே தீயணைப்பு நிலையம், ஈப்போ தீயணைப்பு நிலையம், பெக்கான் பாரு தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
சம்பவ இடத்தை அடைந்த போது மூன்று வீடுகள் 10 முதல் 80 விழுக்காடு வரை தீயில் சேதமடைந்துள்ளதைக் கண்டனர். விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் சிறிது நேரத்தில் தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்தினர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
தீவிபத்து ஏற்பட்ட வீட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மூச்சுத் திணறலுக்கு ஆளானதைத் தொடர்ந்து அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டு தொடர் சிகிச்சைக்காக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தீக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.


