புக்கிட் மெர்தாஜம், ஜூலை 21- போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்றின் நடவடிக்கையை முறியடித்த போலீசார், தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் 750,000 வெள்ளி மதிப்புள்ள 300 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.
இம்மாதம் 16 ஆம் தேதி இங்குள்ள தாமான் இம்பியானில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டதாக பெர்லிஸ் மாநில போலீஸ் தலைவர் டத்தோ சுரினா சஹாட் கூறினார்.
இந்த கஞ்சா கடத்தல் தொடர்பில் பொது மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மாநில போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிரடிச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட இந்த போதைப் பொருள் பின்னர் வேன் மூலம் மற்ற இடங்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர்.
வாகனம் ஒன்றைப் பின்தொடர்ந்த பெர்லிஸ் மாநில போதைப் பொருள் தடுப்பு போலீசார் இங்குள்ள தாமான் இம்பியானில் உள்ள வீட்டை முற்றுகையிட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அச்சோதனையின் போது போதைப் பொருள் பொட்டலங்கள் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த து கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த வீட்டிலிருந்த 41 வயது ஆடவர் மற்றும் 37 வயது இந்தோனேசிய பெண் ஆகியோரை கைது செய்தோம் என அவர் சொன்னார்.


