ஈப்போ, ஜூலை 21- ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியதன் மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மரணமடைவதற்கு காரணமாக இருந்ததாக டிரெய்லர் லோரி ஓட்டுநர் ஒருவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
எனினும், மாஜிஸ்திரேட் நோர் ஹபிஸா இஷாக் முன்னிலையில் தமக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சுஹாய்மி முகமது நோர் (வயது 34) மறுத்து விசாரணை கோரினார்.
பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் BPC 7072 என்ற பதிவு எண் கொண்ட ஹீனோ ரக லோரியை செலுத்தி காரில் பயணித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மரணமடையக் காரணமாக இருந்ததாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது.
கடந்த ஜூலை 13 ஆம் தேதி மாலை 2.55 மணியளவில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 277.1வது கிலோ மீட்டரின் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ரஹிம் ரம்லி (வயது 60), அவரின் மனைவி சித்தி பெத்திமா ஓமார் (வயது 59), இரு பிள்ளைகளான நோர் நடிரா (வயது 28) மற்றும் நோர் ஹமிஸா (வயது 27) ஆகியோர் உயிரிழந்தனர்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு முதல் பத்தாண்டு வரையிலானச் சிறை, கூடுதல் பட்சம் 50,000 வெள்ளி அபராதம் மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு வாகனமோட்டத் தடை விதிக்கும் 1987 ஆம் ஆண்டு (2020 இல் திருத்தப்பட்டது) சாலை போக்குவரத்து சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.


