கோலாலம்பூர், ஜூலை 21- மொத்தம் 25 பயணிகளை ஏற்றியிருந்த இரட்டை மாடி விரைவு பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இச்சம்பவம் ஜாலான் டாமன்சாராவிலிருந்து பங்சார் நோக்கிச் செல்லும் வழியில் நேற்று பின்னிரவு 12.17 மணியளவில் நிகழ்ந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து ஜாலான் ஹங் துவா மற்றும் செந்துல் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 18 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
சம்பவ இடத்தை அடைந்த போது ஈப்போவிலிருந்து வந்த அந்த விரைவு பஸ் விபத்தில் சிக்கியதைத் தாங்கள் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து அதிலிருந்து அனைத்து பயணிகளையும் தாங்கள் மீட்டதாக பெர்னாமா தொடர்பு கொண்ட போது அவர் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கிய பஸ்சை கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகள் அகற்றிய வேளையில், இவ்விபத்தில் லேசான காயங்களுக்குள்ளான பயணிகள் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்றார் அவர்.


