ஷா ஆலம், ஜூலை 20- சிலாங்கூர் வான் கண்காட்சியை இங்கிலாந்தில் பிரபலப்படுத்தும் நோக்கில் பேராளர் குழுவுக்கு தலைமையேற்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அந்நாட்டிற்கு பயணமாகியுள்ளார்.
இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் ஃபார்போரோ அனைத்துலக கண்காட்சியில் சிலாங்கூர் வான் கண்காட்சியை பிரபலப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தனது பேஸ்புக் பதிவில் அமிருடின் குறிப்பிட்டுள்ளார்.
சிலாங்கூர் தொழில்திறன் மேம்பாடு மையத்தின் வாயிலாக மாநில அரசுக்கும் டெசால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்குமிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் சந்திப்பும் இதில் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக மாட்சிமை தங்கிய பேரரசரிடம் சிலாங்கூர் வான் கண்காட்சியின் மேம்பாடுகள் குறித்து விளக்கமளிப்பதற்குரிய வாய்ப்பு தமக்கு கிட்டியாகவும் அவர் சொன்னார்.
அந்த கண்காட்சியில் மலேசிய வெளி வர்த்தக மேம்பாட்டுக் கழகமும் இன்வெஸ்ட் சிலாங்கூரும் ஏற்பாடு செய்துள்ள பெவிலியன் மலேசியா காட்சிக் கூடத்திற்கு மாமன்னர் வருகை புரிந்ததாக அமிருடின் தெரிவித்தார்.
சிலாங்கூர் வான் கண்காட்சி வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியின் மூலம் சுமார் 70 கோடி வெள்ளி பரிவர்த்தனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


