ஷா ஆலம், ஜூலை 20- யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியம் (ஹிஜ்ரா) கோல லங்காட் மாவட்ட தொழில்முனைவோர் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக இவ்வாண்டு ஜனவரி முதல் மொத்தம் 34 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளியை கடனுதவியாக வழங்கியுள்ளது.
கடன் பெற்றவர்களில் சுமார் 40 விழுக்காட்டு வர்த்தகர்கள் 100,000 வெள்ளிக்கும் மேல் வருமானத்தை ஈட்டுவதற்கு இந்த கடனுதவி உதவியது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வணிகத்தை உயர்ந்த பட்ச அளவு மேம்படுத்துவதற்கு இந்த கடனுதவி திட்டத்தின் சூழியல் முறை துணை புரிகிறது என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின் பல்வேறு வணிகத் துறைகளுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட திட்டங்களில் ஐ-பிஸ்னஸ், ஜீரோ டு ஹீரோ, நியாகா டாருள் ஏசான், G கோ டிஜிட்டல், ஐ-லெஸ்தாரி, ஐ-அக்ரோ மற்றும் ஐ-பெர்மூசிம் ஆகிய திட்டங்களும் அடங்கும் என்று அவர் விளக்கினார்.
இந்த வர்த்தக கடனுதவித் திட்டத்தில் அமல்படுத்தப்பட்ட சில தரம் உயர்த்தும் நடவடிக்கைகள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த ஆண்டு மாநில அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 12 கோடி வெள்ளி ஒதுக்கீடு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அமிருடின் குறிப்பிட்டார்.


