ஷா ஆலம், ஜூலை 20- வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் மக்கள் சிரமத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்தும் சபா மாநில சட்டமன்றத்தின் முடிவு பலரது கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
மக்கள் எதிர்நோக்கும் சுமையைக் கருத்தில் கொண்டு இந்த சம்பள உயர்வு முடிவை தொடர வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
மக்கள் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் பெரும் சிரமத்தில் இருக்கும் நிலையில் சபா சட்டமன்றம் எடுத்துள்ள இம்முடிவு குறித்து நான் மிகவும் வருத்தமடைகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
தங்கள் சொந்த நலனை விட மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும்படி அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் நான் கேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
மாநில முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான தீர்மானத்தை மாநில சட்டமன்றம் நேற்று நிறைவேற்றியது.


