ஷா ஆலம், ஜூலை 20- கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் காணாமல் போனதாக கூறப்படும் தொலைக்காட்சி ஒன்றின் முன்னாள் செய்தி வாசிப்பாளரான ஜலினா ஷஹாரா அஸ்மான் இன்னும் நாட்டில்தான் இருப்பதாக நம்பப்படுகிறது.
குடிநுழைவுத் துறையிடமிருந்த கிடைத்த தகவலின் பேரில் அவர் வெளிநாட்டிற்கு செல்லவில்லை என்பதை தாங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
அந்த 58 வயது பெண் காணாமல் போனது தொடர்பான செய்தி வெளியிட்ட பிறகும் அவர் பற்றிய தகவலறிந்தவர்களிடமிருந்து எந்த அழைப்பையும் தாங்கள் பெறவில்லை என்று அவர் சொன்னார்.
ஜலினா போன்ற தோற்றம் கொண்ட பெண்மணி ஒருவரை தாம் கண்டதாக மோஸ்யுக்கி பொர்ஹான் என்ற நபர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
ஜலினா போன்ற தோற்றத்திலான அந்த பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் செக்சன் 9இல் உள்ள எனது உணவகத்திற்கு வந்தார். அவர் நடுக்கத்துடனும் பதற்றத்துடனும் காணப்பட்டார் என்று அவ்வாடவர் அப்பதில் கூறியிருந்தார்.
தன் தாயார் ஜலினாவை கடந்தாண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரின் மகனான மிக்காயில் நோர்மான் (வயது 33) கடந்த திங்கள் கிழமை போலீசில் புகார் செய்துள்ளதாக ஏசிபி இக்பால் தெரிவித்தார்.


