ஹனோய், ஜூலை 20- இந்தோனேசியாவுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்தில் (ஆசியான்) அடுத்தாண்டு இணையவும் தீமோர் லெஸ்தே ஆர்வம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்காசியாவின் ஒரு பகுதியாக விளங்கும் தீமோர் லெஸ்தே பொருளாதார ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளில் பலவற்றை பூர்த்தி செய்துள்ளது. ஆகவே, ஆசியானின் ஆக்ககரமான உறுப்பினராக அது செயல்பட முடியும் என்று அந்நாட்டு அதிபர் ஜோஸ் ரமோஸ்-ஹர்த்தோ கூறினார்.
இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவை ஹனோயில் சந்தித்த போது இந்த விருப்பத்தை அவர் வெளியிட்டதாக வியட்னாம் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி சேனல் நியுஸ் ஆசியா செய்தி வெளியிட்டுள்ளது.
வரும் 2023 ஆம் ஆண்டில் ஆசியான் தலைவர் பொறுப்பை இந்தோனேசியா ஏற்கும் போது அந்த கூட்டமைப்பில் தங்கள் நாடு இணையும் வாய்ப்பு கிட்டும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக அதிபர் ஜோஸ் ரமோஸ் தெரிவித்தார்.
ஆசியானில் இணைவதற்கு தீமோர் லெஸ்தே கடந்த 2011 ஆம் ஆண்டில் விண்ணப்பம் செய்தது. தற்போது அந்நாடு அவ்வமைப்பில் பார்வையாளராக மட்டுமே உள்ளது.
தீமோர் லெஸ்தே நாட்டில் எரிசக்தி, வங்கித்துறை தொலைத்தொடர்பு துறைகளில் இந்தோனேசியா 81.8 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்துள்ளது.


