ஜெனிவா, ஜூலை 20- ஐரோப்பாவில் வெப்ப அலையின் தாக்கம் வரலாறு காணாத அளவு உயர்வு கண்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் சுகாதாரம், பொருளாதாரம், வேளாண் உற்பத்தி, சுற்றுலாத் துறைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெப்பத்தைத் தணிக்கும் நமது முயற்சிகளையும் தாண்டி இந்த கால நிலை மாற்றம் வரும் 2060 வரை நீடிக்கும் என்று உலக வானிலை நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் பெட்டரி தால்ஸ் கூறினார்.
இந்த வெப்ப அலை பிரச்னை வழக்கமான ஒன்றாகி விடும் என்பது இதன் பொருளாகும் என்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.வின் செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தாக அனாடோலும் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது ஐரோப்பாவில் நீடித்து வரும் வெப்ப அலை தொடர்பான இந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், வெப்ப அலைப் பிரச்னையை எதிர்கொள்வதற்குரிய கூடுதல் வசதிகளை உலகம் தற்போது பெற்றுள்ளதாக கூறினார்.
முந்தைய ஆண்டுகளை விட தற்போது வெப்ப அலையைக் கையாளக் கூடிய வசதிகள் உள்ளதோடு வெப்ப அலையினால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்னைகள் குறித்தும் மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்றார் அவர்.
பருவ நிலை மாற்றம் தொடர்பான மக்களின் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெப்ப அலையின் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.


