பெட்டாலிங் ஜெயா, ஜூலை 20- முதல் சிலாங்கூர் திட்டம் (ஆர்.எஸ்.1) வரும் திங்களன்று மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மாநில அரசு மேற்கொள்ளவுள்ள மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான விளக்கங்களைப் பெற சட்டமன்றத்தில் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆற்றவுள்ள உரையை தவறாது செவிமடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சட்டமன்றக் கூட்டத் தொடரின் முதல் அங்கமாக இந்த முதல் சிலாங்கூர் திட்டத் தாக்கல் இடம் பெறும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்தப் பின்னர் இந்த முதல் சிலாங்கூர் திட்டம் வரையப்பட்டதாக அவர் சொன்னார்.
பல்வேறு திட்டங்களும் உதவித் தொகுப்புகளும் அமலாக்கத்திற்காக வரையப்பட்டுள்ளன. இப்போது செயலில் இறங்குவதற்குரிய தருணம் வந்து விட்டது. திட்டமிட்டதை குறிப்பாக மக்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளை அமல்படுத்தும் பணியை நாம் இனி தொடங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
முதல் சிலாங்கூர் திட்டம் என்பது மிகவும் சிறப்பான ஒரு திட்டமாகும். இதன் தொடர்பில் மந்திரி புசார் வரும் திங்கள்கிழமை ஆற்றவுள்ள வரையை அனைவரும் செவிமடுக்க வேண்டும் என்றார் அவர்.
மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டை இந்த முதல் சிலாங்கூர் திட்டம் தனது பிரதான திட்ட இலக்காக கொண்டுள்ளது. பொருளாதார மேம்பாடு, மக்களின் சுபிட்சமான வாழ்க்கை முறை, சமூக நலன் ஆகிய அம்சங்கள் இத்திட்ட அமலாக்கத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த முதல் சிலாங்கூர் திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களை சிலாங்கூர் கினி பத்திரிகை மற்றும் சிலாங்கூர் கினி அகப்பக்கம் வாயிலாகவும் தமிழ், ஆங்கில மற்றும் மேண்டரின் பதிப்புகள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இந்த நிகழ்வு சிலாங்கூர் டிவி மற்றும் பேஸ்புக் மீடியா சிலாங்கூர் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.


