ஷா ஆலம், ஜூலை 20- இம்மாதம் 24 ஆம் தேதி பெட்டாலிங்கில் நடைபெறவிருக்கும் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் நடனத்தில் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் ஆட்டத்திறனை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் போலவார்ட் சதுக்கத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் மக்கள் நலத் திட்ட அறிமுக நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த நடனப் போட்டி இடம் பெறுகிறது.

இந்தப் போட்டியில் வயது வரம்பின்றி அனைவரும் கலந்து கொள்ளலாம். முதல் நிலை வெற்றியாளருக்கு 1,000 வெள்ளி பரிசாக வழங்கப்படும். இரண்டாம் பரிசு பெறுபவருக்கு 700 வெள்ளியும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு 500 வெள்ளியும் நான்காம் இடத்தைப் பிடிப்பவருக்கு 300 வெள்ளியும் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்பதற்கு ஜூலை 23 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
இது தவிர பல்லாங்குழி, செப்பாக் தாக்ராவ் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கும் இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு வெ.150 முதல் வெ.350 வரை பரிசு வழங்கப்படும்.
மாநில அரசின் மேம்படுத்தப்பட்ட நடப்புத் திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது.


