ஷா ஆலம், ஜூலை 20- சுங்கை பூலோ, எஸ்.பி. ஜெயா தொழில்பேட்டையிலுள்ள ஜாலான் குஸ்தாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இணைய சேவை மையம் மீது செலாயாங் நகராண்மைக் கழக(எம்.பி.எஸ்.) அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அந்த மையம் கடந்த மூன்று வாரங்களாக சட்டவிரோதமாக செயல்படுவதோடு வீடியோ கேம் வாயிலாக கள்ள சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து இந்த அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக நகராண்மைக் கழகத் தலைவர் முகமது யாஷிட் சைரி கூறினார்.
நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அந்த மையத்தில் இரு பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். எனினும், எங்களின் வருகையை அறிந்த அவர்கள் அம்மையத்தின் கூரை வழியாக தப்பியோடி விட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த மையத்தில் இருந்த 14 கையடக் கணினிகள் மற்றும் ஆறு மடிக்கணினிகளை தாங்கள் கைப்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டவிரோதமான முறையில் செயல்பட்டதற்காக அந்த மையம் மீது 2007 ஆம் ஆண்டு செலாயாங் நகராண்மைக் கழக துணைச் சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் கூறினார்.


