கோலாலம்பூர், ஜூலை 20- கோலாலம்பூர் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை பொழுதுபோக்கு மையங்களுக்கு எதிராக மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் அம்மையங்களுக்கு போதைப் பொருளை விநியோகம் செய்ததாக நம்பப்படும் டாக்டர்கள் எனக் கூறப்படும் மூவர் உள்பட 180 பேர் கைது செய்யப்பட்டனர்.
இம்மாதம் 15 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில் 20 முதல் 40 வயது வரையிலான ஒரு உள்நாட்டவர் மற்றும் இரு வெளிநாட்டினரை உள்ளடக்கிய அந்த மூன்று ‘டாக்டர்களும்‘ பிடிபட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறினார்.
பல்வேறு மூலப்பொருள்களை சரியான அளவில் கலந்து போதைப் பொருள்களைத் தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள் என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அம்மூவரும் டாக்டர்கள் என அழைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இவர்கள் கேளிக்கை மையங்கள், மதுபான விடுதிகள் மற்றும் கராவோக்கே மையங்களில் வாடிக்கையாளர்களைத் தேடுவது வழக்கம். கடந்த ஆறு மாத காலமாக இந்த நடவடிக்கையில் இவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர் என்றார் அவர்.
கோலாலம்பூரிலுள்ள பொழுதுபோக்கு மையங்கள் போதைப் பொருள் விநியோக நடவடிக்கையிலிருந்து விடுபட்டிருப்பதை உறுதி செய்ய கோலாலம்பூர் போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதை இந்த அதிரடிச் சோதனை புலப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.
இந்த நடவடிக்கையின் போது மாநகரிலுள்ள 20 பொழுதுபோக்கு மையங்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டதோடு பல்வேறு வகையான போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.


