ஷா ஆலம், ஜூலை 20- இரண்டு லட்சம் வெள்ளிக்கும் மேற்பட்ட மதிப்பிலான மானிய விலை டீசல் எண்ணெய் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் வங்காளதேச ஆடவர் ஒருவர் உள்பட ஒன்பது பேரை உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநிலப் பிரிவு கைது செய்துள்ளது.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் கம்போங் பாரு சுபாங்கிலுள்ள ஒரு இடத்தில் நேற்று முன்தினம் இரவு 11.000 மணியளவில் தாங்கள் அதிரடிச் சோதனையை மேற்கொண்டதாக அமைச்சின் அமலாக்கப் பிரிவு இயக்குநர் அஸ்மான் ஆடாம் கூறினார்.
இச்சோதனையின் போது இரண்டு லட்சம் வெள்ளிக்கு மேற்பட்ட மதிப்பிலான 100,000 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர நான்கு எண்ணெய் லோரிகள், இரு கார்கள் உள்பட பொருள்களும் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 17 லட்சம் வெள்ளியாகும் என அவர் குறிப்பிட்டார்.
கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களை வைத்திருப்பதற்கான அனுமதியை உரிய தரப்பினரிடமிருந்து அதன் உரிமையாளர் பெறவில்லை என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார் அவர்.
இச்சம்பவம் தொடர்பில் 1961 ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


