கொழும்பு, ஜூலை 18- இலங்கையின் இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அந்நாட்டில் அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் நேற்று வெளியிட்ட குறிப்பு ஒன்று கூறியது.
அந்த தீவு நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ரணில் தலைமையிலான அரசாங்கம் கடுமையாகப் போராடி வருகிறது.
பொது ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத்தை உறுதி செய்வதற்கும் மக்களின் உயிருக்கு பாதுகாப்பளிப்பதற்கும் இந்நடவடிக்கை தேவைப்படுவதாக அந்த குறிப்பு தெரிவித்தது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மக்களின் புரட்சிக்கு பயந்து பதவியைத் துறந்து வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டார். நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு தாம் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக அவர் கூறினார்.
ராஜபக்சேவின் ராஜினாமாவை இலங்கை நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பூ வீதிகளில் ஒன்று திரண்டு அதிபரின் வீடு மற்றும் அலுவலகங்களை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து அவர் மாலத் தீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூருக்கு பயணமானார்.
புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காக அந்நாட்டு நாடாளுமன்றம் கடந்த சனிக்கிழமை கூடியது. கப்பல் ஒன்றில் எரிபொருள் வருவது அந்நாட்டு மக்களுக்கு சற்று ஆறுதலைத் தந்துள்ளது.


