ECONOMY

அடுத்த தேர்தலில் சிலாங்கூர், பினாங்கை பக்கத்தான் தக்க வைத்துக் கொள்ளும்- அன்வார் நம்பிக்கை

15 ஜூலை 2022, 4:36 AM
அடுத்த தேர்தலில் சிலாங்கூர், பினாங்கை பக்கத்தான் தக்க வைத்துக் கொள்ளும்- அன்வார் நம்பிக்கை

ஷா ஆலம், ஜூலை 15- வரும் 15வது பொதுத் தேர்தலில்  சிலாங்கூர் மற்றும் பினாங்கை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இம்மாதம் 14 ஆம் தேதி மீடியா சிலாங்கூர் ஊடகத்திற்கு  அளித்த பிரத்தியேகப்  பேட்டியில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான அவர் இதனைக் கூறினார்.

இந்த பேட்டியின் போது, கடந்த மூன்று தவணைகளாக இவ்விரு மாநில மக்களும் ஏன் பக்கத்தான் கூட்டணியை ஆதரித்து வருகின்றனர் என அன்வாரிடம் கேட்கப்பட்டது.

அக்கேள்விக்கு பதிலளித்தபோது, மக்களின் விழிப்புணர்வும் புரிந்துணர்வும் பரந்த அளவில் உள்ளதை  பினாங்கை பூர்வீகமாகவும் சிலாங்கூரை வசிப்பிடமாகவும் நெகிரி செம்பிலான் மாநில நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் நான் உணர்கிறேன் என்று அன்வார் சொன்னார்.

இவ்விரு மாநிலங்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதோடு இம்மாநிலங்களில் அபரிமித வெற்றியையும் பெற முடியும் என நம்புகிறேன். நமது தகவல்களை இவ்விரு மாநிலங்களையும் தாண்டி கொண்டுச் சென்று சேர்ப்பது தான் தற்போதைய சவாலாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

நீர் விநியோகத்தை உதாரணமாக க் கூறலாம். சிலாங்கூரில் அது இலவசமாக வழங்கப்படுகிறது. சரவா மாநிலத்தின் நீண்ட வீட்டுப் பகுதிகளி பிரசாரம் செய்த போது கட்டணமில்லா நீர் கொள்கையை அங்குள்ளவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால், சிலாங்கூரில் அது வழக்கமான ஒன்றாகி விட்டது என்றார் அவர்.

ஆகவே, சிலாங்கூர் எல்லைகளைத் தாண்டி தகவல்களை வழங்கும் நடவடிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும். நாம் சொல்லும் தகவல்களைக் கேட்பவர்கள் அதில் உடன்பாடு கொள்ளாவிட்டாலும் பாதகமில்லை. குறைந்தபட்சம் அத்தகவல்களை அவர்களைச் சென்றடைந்து விடும்.

இருந்த போதிலும், இவ்விரு மாநில அரசுகளும் மிகுந்த கவனப்போக்குடன் இருக்க வேண்டும். அரசியல் எதிரிகள் வாக்காளர்கள் மத்தியில் அவதூறுகளைப் பரப்பி நம்மைத் தரம் தாழ்த்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வர் என்று அவர் மேலும் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.