கோலாலம்பூர், ஜூலை 14- இந்தோனேசியாவின் பெகாசியில் நேற்று நடைபெற்ற 19 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கான ஆசியான் கால்பந்து சம்மேளன (ஏ.எப்.எப்.) கால்பந்து போட்டியில் மலேசிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வியட்னாமை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.
பெட்ரியோட் சண்ட்ரபஹா அரங்கில் நடைபெற்ற இந்த அரையிறுதிச் சுற்றில் மலேசியா குழு 26வது நிமிடத்தில் முதல் கோலை புகுத்தி முன்னிலை வகித்தது.
தொடர்ந்து இரு குழுக்களும் எதிரணியின் கோல் முனையில் இடைவிடாத தாக்குதல்களை நடத்திய போதிலும் முதல் பாதி ஆட்டம் முடியும் வரை ஆட்ட நிலவரம் தொடர்ந்து 1-0 என்ற கோல் கணக்கிலேயே இருந்தது.
ஆட்டத்தின் 70 வது நிமிடத்தில் ஹக்கிமி அஜிம் பெனால்டி பகுதி நோக்கி அடித்த பந்தை ஹைக்கால் ஹக்கிமி ஹைரி லாவகமாக வலைக்குள் புகுத்தி கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.
ஆட்டம் முடிய மூன்று நிமிடங்கள் இருக்கையில் ஹைக்கால் டேனிஷ் ஹைசோன் மேலும் ஒரு கோலை அடித்து கோல் எண்ணிக்கையை 3-0 என ஆக்கினார்.
இன்று நடைபெறும் லாவோஸ் மற்றும் தாய்லாந்துக்குமிடையிலான ஆட்டத்தின் முடிவைப் பொறுத்து அவ்விரு அணிகளில் ஒன்றுடன் மலேசியா இறுதியாட்டத்தில் களம் காணும்.


