தெனோம், ஜூலை 12- இங்குள்ள பெனாவான் கோல தெனோம் சுங்கை பாடாஸ் ஆற்றில் கடந்த சனிக்கிழமை வலைவீசி மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆடவர் ஒருவர் நீரில் மூழ்கினார். அவரது உடல் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.
அல்போனியஸ் எபோன் அம்பாபி (வயது 25) என்ற அந்த ஆடவர் ஆற்றை நீந்திக் கடக்க முயன்ற போது காணாமல் போனதாக பெரித்தா ஹரியான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நான்கு குழுக்களாகப் பிரிந்து தேடுதல் நடவடிக்கையை தாங்கள் மேற்கொண்டு வருவதாக சபா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மத்திய நடவடிக்கை மையத்தின் பேச்சாளர் கூறினார்.
அந்த ஆற்றில் சுமார் நான்கு கிலோ மீட்டர் பகுதியில் கரையோரத் தேடுதல் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.
அவ்வாடவரின் உடல் கண்டு பிடிக்கப்படாத நிலையில் நேற்று மாலை 5.30 மணியுடன் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். இன்று காலை தொடங்கி தேடுதல் நடவடிக்கை தொடரப்படுவதாகவும் அவர் சொன்னார்.


