ஷா ஆலம், ஜூலை 12- ஈஜோக் சட்டமன்றத் தொகுதியிலுள்ள வசதி குறைந்த 100 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகளும் இறைச்சியும் வழங்கப்பட்டன.
ஹாஜ்ஜூப் பெருநாளின் போது வசதி குறைந்தவர்களுக்கு பொருளாதார ரீதியில் ஏற்படக்கூடிய சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இட்ரிஸ் அகமது கூறினார்.
வசதி குறைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக் கூடையில் அரிசி, சமையல் எண்ணெய், பால், பிஸ்கட், வெங்காயம், உருளைக் கிழங்கு உள்பட 120.00 வெள்ளி மதிப்பிலான பொருள்கள் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு பெருநாளின் போது மாநில அரசு, தொகுதி சேவை மையம் மற்றும் அரசு சாரா அமைப்புகள் வழங்கிய 4 மாடுகள் மற்றும் 10 ஆடுகளை பொது மக்களுக்கு பகிர்ந்தளித்தோம் என்றார் அவர்.
இவ்வாண்டு தியாகத் திருநாளுக்காக சுமார் 50 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி செலவில் 660 மாடுகளும் 1,000 ஆடுகளும் அனைத்து தொகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் கூறியிருந்தார்.


