புத்ரா ஜெயா, ஜூலை 11- பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலை மலேசிய வெளியுறவு அமைச்சு அணுக்கமாக கண்காணித்து வருகிறது.
கொழும்புவில் உள்ள மலேசிய தூதரகம் வாயிலாக அங்குள்ள மலேசியர்களை தாங்கள் தொடர்பு கொண்டுள்ளதாக விஸ்மா புத்ரா கூறியது.
அந்நாட்டிலுள்ள மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உதவி தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் தூதரக அதிகாரிகளை உடனடியாகத் தொடர்பு கொள்வதற்கும் ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அது தெரிவித்தது.
ஆபத்து, அவசர வேளைகளில் விரைவாக உதவிகளைப் பெறுவதற்கு ஏதுவாக மலேசிய தூதரகத்தில் பதிந்து கொள்ளுமாறு அங்குள்ள மலேசியர்களை விஸ்மா புத்ரா அறிக்கையின் வாயிலாகக் கேட்டுக் கொண்டது.
அந்நாட்டிலுள்ள மலேசியர்கள் பாதுகாப்புக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில் அந்நாட்டு அதிகாரிகள் இடும் உத்தரவுகளைப் பின்பற்றி நடக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள மலேசியர்கள் அந்நாட்டில் நிலைமை சீராகவும் வரை தங்கள் பயணத்தை ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


