ஷா ஆலம், ஜூலை 10- புக்கிட் செராக்கா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் தற்போதைய பரப்பளவு 1,298.86 ஹெக்டராகவும் புக்கிட் செராக்கா தம்பஹான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் பரப்பளவு 982.80 ஹெக்டராகவும் உள்ளது.
மேம்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட பகுதிக்கு மாற்றாக புதிய வனப்பகுதியை உருவாக்கும் திட்டத்தை நடப்பு அரசாங்கமே அமல்படுத்தி வருவதாக மாநில வன இலாகாவின் இயக்குநர் டத்தோ அகமது ஃபாட்சில் அப்துல் மஜிட் கூறினார்.
மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் குறைந்து 30 விழுக்காடு வனப்பகுதியாக இருக்க வேண்டும் என்ற மாநில அரசின் நிலைப்பாட்டிற்கேற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு உயிரினங்கள் மற்றும் தாவர வகைகளின் வாழ்வதாரப் பகுதியாக விளங்கக்கூடிய பாதுகாக்கப்பட்ட முதல் நிலை வனப்பகுதியான இதனை மாநில வன இலாகா தனது பராமரிப்பில் வைத்துள்ளது என்று அவர் சொன்னார்.
புக்கிட் செராக்கா பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்கான நில அந்தஸ்தை மாற்றும் நடவடிக்கை கடந்த 1991 முதல் 2006 வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய அவர், யு10 பகுதியிலுள்ள 406.22 ஹெக்டர் வனப் பகுதியும் அதில் அடங்கும் என்றார்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கான நிலத் தகுதியை மாற்றும் நடவடிக்கை மக்கள் கருத்தைக் கேட்டறியும் நடைமுறையின் கீழ் மேற்கொள்ளப்படவில்லை. காரணம், கடந்த 2011 ஆம் ஆண்டில் மாநில வனச் சட்டத்தின் 11வது பிரிவில் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் இந்த நட்டிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.


