ஈப்போ, ஜூலை 8- இங்குள்ள தாமான் பெர்ச்சாம் அமானில் உள்ள வீட்டில் கணவன்-மனைவி நேற்று காலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவரை போலீசார் கெந்திங் மலையில் நேற்றிரவு கைது செய்தனர்.
கொலையுண்ட நபரின் தம்பியான அந்த 61 வயது ஆடவரை நேற்றிரவு 7.45 மணியளவில் கெந்திங் மலையில் தாங்கள் கைது செய்ததாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ மியோர் ஃபாரிட்லத்ராஷ் வாஹிட் கூறினார்.
இந்த கோரப் படுகொலையில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கோடரி ஒன்றையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
கொலை நிகழ்ந்த 11 மணி நேரத்திலேயே இச்சம்பவத்திற்கு தீர்வு காணப்பட்டதாக கூறிய அவர், சந்தேகப் பேர்வழியை விரைந்து பிடிப்பதற்கு உதவிய பகாங் மாநில காவல் துறை, ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் கெந்திங் நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்களுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக சொன்னார்.
வீட்டின் வரவேற்பறையில் ஊய் தின் லு (வயது 59) என்ற மூதாட்டியும் இங் சுன் ஹோன் (வயது 64) என்ற அவரின் கணவரும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை அவரின் சகோதரர் சுன் ஹோன் நேற்று காலை 8.50 மணியளவில் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மூதாட்டிக்குச் சொந்தமான புரோட்டோன் சாகா காரில் தப்பிச் சென்ற சந்தேகப் பேர்வழியைத் தேடும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தினர்.


