ECONOMY

மானிய விலை சமையல்  எண்ணெய் வெளிநாட்டிற்கு கடத்தல்- மூன்று நைஜீரியர்கள் கைது 

30 ஜூன் 2022, 8:58 AM
மானிய விலை சமையல்  எண்ணெய் வெளிநாட்டிற்கு கடத்தல்- மூன்று நைஜீரியர்கள் கைது 

காப்பார், ஜூன் 30- மின்சார கேத்தல் மற்றும் ரைஸ் குக்கர் உள்ளிட்ட மின் உபகரணங்கள் மூலம் உதவித் தொகை வழங்கப்பட்ட ஒரு கிலோ பாக்கெட் சமையல் எண்ணெயை வெளிநாட்டிற்கு கடத்தி வந்ததாக நம்பப்படும் மூன்று நைஜீரிய ஆடவர்களை வட கிள்ளான் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.

பண்டார் பாரு கிள்ளானிலுள்ள வணிக மையம் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த சட்டவிரோத நடவடிக்கையை மூன்று தினங்களுக்கு முன்னர் தாங்கள் முறியடித்ததோடு 30 முதல் 40 வயது வரையிலான அம்மூவரையும் கைது செய்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எஸ்.விஜயராவ் கூறினார்.

பொது மக்களிடமிருந்து கிடைத்த புகாரின் பேரில் பிற்பகல் 2.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அந்நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் உபரி பாகங்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த அம்மூவரும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் சொன்னார்.

இந்நடவடிக்கையின் போது 1,100 ஒரு கிலோ பாக்கெட் சமையல் எண்ணைய், 225 பயன்படுத்தப்பட்ட மின்சார கேத்தல்கள், 51 மின்சார உபகரணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைப்பற்றபட்ட அந்த பொருள்களின் மொத்த மதிப்பு 18,910 வெள்ளியாகும் என்று அவர் தெரிவித்தார்.

உதவித் தொகை வழங்கப்பட்ட சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை வாங்கி அவற்றை மின்சார கேத்தல் அல்லது ரைஸ் குக்கரில் இரண்டு அல்லது மூன்று வீதம் பதுக்கி கொள்கலன் மூலம் நைஜீரியாவுக்கு அனுப்பும் சட்டவிரோத நடவடிக்கையில் அக்கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

நைஜீரியாவில் சமையல் எண்ணெய் விலை மிகவும் அதிகம் என்பதால் உள்நாட்டில் விற்கப்படும் மானிய விலை எண்ணெயை கடத்தும் நடவடிக்கையில் அக்கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது என அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.