ECONOMY

15 லட்சம் வெள்ளியை மோசடி - வழக்கறிஞர் மீது குற்றச்சாட்டு

28 ஜூன் 2022, 9:16 AM
15 லட்சம் வெள்ளியை மோசடி - வழக்கறிஞர் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலம், ஜூன் 28- பதினைந்து  லட்சத்து இருபதாயிரம் வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்ததாக வழக்கறிஞர் ஒருவர் மீது இங்குள்ள  செசன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

எனினும், முகமது ஜவாஹிட் யா (வயது 47) என்ற அந்த வழக்கறிஞர் தமக்கெதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

ஸவாகிட் அண்ட் கோ நிறுவனத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் தமது பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்ட 15 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளியை மோசடி செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9 ஆம் தேதிக்கு 11 ஆம் தேதிக்கும் இடையே சுபாங் பெஸ்தாரியிலுள்ள அந்த வழக்கறிஞர் அலுவலகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு முதல் இருபதாண்டு வரையிலான சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 409 வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இது கடும் குற்றம் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதோடு மோசடி செய்யப்பட்ட தொகையும் பெரியது என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் தரக்கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் உசாயிர் அப்துல் முனிர் நீதிமன்றத்தைக் வலியுறுத்தினார்.

எனினும், தனது கட்சிக்காரர் வயதான பெற்றோர்களையும் படிக்கும் வயதில் உள்ள ஐந்து பிள்ளைகளையும் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளதால் குறைந்த தொகை ஜாமீன் வழங்கும்படி முகமது ஜவாஹிட்டின் வழக்கறிஞர் ஃபாஹிமி அப்துல் மோய்ன்  கேட்டுக் கொண்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 50,000 வெள்ளி ஜாமினில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்டு மாதம் 9ஆம் தேதிக்கு ஒத்தி  வைத்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.