கோல லங்காட், ஜூன் 26- மாநிலத்திலுள்ள சிறு வியாபாரிகளுக்கு இலக்கவியல் மேம்பாட்டுப் பயிற்சியை சிலாங்கூர் பிளாட்பார்ம் (பிளாட்ஸ்) 2022 மூன்றாம் காலாண்டில் வழங்கும்.
மாநிலத்திலுள்ள 12 ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் இந்த பயிற்சி வழங்கப்படும் என்று பெர்மோடலான் சிலாங்கூர் பெர்ஹாட் (பி.என்.எஸ்.பி.) தலைமை பொது உறவு அதிகாரி அலினா இட்ரிஸ் கூறினார்.
பிளாட்ஸ் திட்டத்திற்கான தேவையும் பயன்பாடும் அதிகரித்துள்ளதால் அந்த வர்த்தகத் தளம் சார்ந்த நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்த விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
வர்த்தகத்தைப் பெருக்குவதற்கு ஏதுவாக அங்காடி மற்றும் சில்லறை வியாபாரிகளை தேடி கண்டு பிடித்து பிளாட்ஸ் பட்டியலில் பதிவு செய்யும் பணியில் ஆர்.டி.எஸ். எனப்படும் சிலாங்கூர் டிஜிட்டல் பார்ட்னர்ஸ் அம்பாசிடர் அமைப்பு ஈடுபடும் என்றும் அவர் சொன்னார்.
நேற்று இங்குள்ள டத்தாரான் மோரிப்பில் நடைபெற்ற ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வின் போது கோல லங்காட் நகராண்மைக் கழகத்திடம் பிளாட்ஸ் ஸ்டிக்கர்களை வழங்கும் நிகழ்வில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்வாண்டு மே மாதம் வரை மொத்தம் 10,119 பேர் பிளாட்ஸ் அமைப்பில் பதிவு செய்துள்ளதாக கூறிய எலினா, அவர்களில் 139 பேர் கோல லங்காட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்.


