ஷா ஆலம், ஜூன் 24- கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பான அடைவு நிலையை பதிவு செய்த மாணவர்களுக்கு பாத்தாங் காலி தொகுதி ஒருங்கிணைப்பு சேவை மையம் வெகுமதி வழங்கவுள்ளது.
எஸ்.பி.எம். தேர்வில் 5ஏ மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த வெகுமதி வழங்கப்படுவதாக தொகுதி ஒருங்கிணைப்பு அதிகாரி சைபுடின் ஷாபி முகமது கூறினார்.
இத்தேர்வில் 5ஏ க்களுக்கும் மேல் பெற்ற மாணவர்கள் மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற தகுதி பெற்றுள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பாத்தாங் காலி தொகுதி வாக்காளர்களாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
விண்ணப்பம் செய்வோர் மலேசிய பிரஜைகளாகவும் பாத்தாங் காலி தொகுதியிலுள்ள பள்ளிகளில் பயின்றவர்களாகவும் இருத்தல் அவசியம் என்றார் அவர்.
எஸ்.பி.எம். தேர்வில் 5ஏ பெற்ற மாணவர்களுக்கு 100 வெள்ளியும் 6ஏ பெற்ற மாணவர்களுக்கு 150 வெள்ளியும் 7 ஏ பெற்ற மாணவர்களுக்கு 200 வெள்ளியும் 8ஏ பெற்ற மாணவர்களுக்கு 250 வெள்ளியும் 9ஏ மற்றும் அதற்கும் மேல் பெற்ற மாணவர்களுக்கு 300 வெள்ளியும் வழங்கப்படும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தோன்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி தகுதி உள்ள மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


