ஷா ஆலம், ஜூன் 14- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய (கே.எல்.ஐ.ஏ.) வளாகத்தில் புகைபிடித்த குற்றத்திற்காக 196,400 வெள்ளி மதிப்பிலான 788 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.
இம்மாதம் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் தெர்பாங் கே.எல்.ஐ.ஏ. முதல் கட்ட சோதனை நடவடிக்கையில் விமான நிலைய வளாகத்தில் 708 பேரும் வணிக வளாகத்தில் 61 பேரும் புகைபிடிப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகாடிமான் கூறினார்.
இது தவிர, 2004 ஆம் ஆண்டு புகையிலை விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் 16 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்ட வேளையில் 18 வயதுக்கும் குறைவானோரை சம்பந்தப்படுத்திய மூன்று குற்றங்களும் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் முதன்மை வான் போக்குவரத்து மையமாகவும் பிரதான அனைத்துலக நுழைவாயிலாகவும் கே.எல்.ஐ.ஏ. விளங்குகிறது. இப்பகுதி புகைபிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதியாக ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஒவ்வொரு குற்றப்பதிவும் நீதிமன்றத்தில் ஆஜராகும் உத்தரவைக் கொண்டிருப்பதோடு பொது இடங்களில் புகைபிடித்ததற்காக 250 வெள்ளி வரை அபராதம் விதிக்கவும் வகை செய்கிறது. வயது குறைந்தோருக்கு இக்குற்றத்திற்கு 50 வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என அவர் சொன்னார்.


