கோலாலம்பூர், ஜூன் 14- கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு தழுவிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஓப் நோடா சோதனையில் ஜி.ஆர்.ஓ. எனப்படும் வாடிக்கையாளர் உபசரணைப் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நடவடிக்கையின் போது மொத்தம் 102 வெளிநாட்டுப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் ஜாலில் ஹசான் கூறினார்.
இச்சோதனை நடவடிக்கையின் போது பொழுது போக்கு மையங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், பணியாளர்கள் உள்பட 61 உள்நாட்டினரும் கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
குற்றப்புலனாய்வுத் துறையின் டி7 எனப்படும் ஒழுங்கீனச் செயல், சூதாட்டம் மற்றும் குண்டர் கும்பல் தடுப்பு பிரிவின் மூலம் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
குற்றச் செயல்கள், குண்டர் கும்பல் ஈடுபாடு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்நடவடிக்கையின் போது பொழுது போக்கு மையங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 1,133 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.
இந்த சோதனையின் போது 44 வர்த்தக லைசென்ஸ்கள், ஒலி பெருக்கி சாதனங்கள், 85 மதுபான போத்தல்கள், 12,885 வெள்ளி ரொக்கம் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


