ஷா ஆலம், ஜூன் 14- பதினெட்டு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்களில் 30 விழுக்காட்டினருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு நபரின் இரத்த அழுத்தம் 140/90 mmHg அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் போது உயர் இரத்த அழுத்தம் ஒரு ஆபத்தான நோயாக ஆகும் என்று டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
எப்போதும் தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்படுகிறதா? இது உயர் இரத்த அழுத்தம் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். விரைவில் சோதனை செய்யுங்கள். சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் நீங்கள் உடல்நலப் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
பொதுவாக, தனிநபர் மற்றும் குடும்ப ஆரோக்கியத்தின் நல்வாழ்வைப் பேணுவதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் சிறந்தது. உடலாரோக்கியத்தின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நாம் எடுக்கக்கூடிய சிறந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று அவர் முகநூல் பதிவில் கூறினார்.
கடந்த மே 22 ஆம் தேதி தொடங்கிய இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டம் வரும் செப்டம்பர் 4 வரை மாநிலத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் நடைபெறும்.
சுமார் 34 லட்சம் வெள்ளி செலவில் மாநில அரசு அமல்படுத்தியுள்ள இத்திட்டத்தின் மூலம் 39,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தில் உடல் பரிசோதனை, இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், கண், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய், பெருங்குடல் மல இரத்த பரிசோதனை மற்றும் புரோஸ்டேட் சோதனை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
மேல் விபரங்களுக்கு selangorsaring.selangkah.my என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம். 1-800-22-6600 என்ற எண்களில் சிலாங்கூர் சமூக நலத் தொண்டர் அமைப்பு அல்லது drsitimariah.com/talian-suka/ இணைப்பின் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.


