ஜகார்த்தா, ஜூன் 14 - இந்தோனேசியாவின் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்ததற்காக மலேசியக் கொடி ஏந்திய இரண்டு படகுகள் உட்பட 4 படகுகளை இந்தோனேசியாவின் கடல்சார் ஆணையம் தடுத்து வைத்துள்ளது.
கடந்த ஜூன் 8 ஆம் தேதி மலாக்கா நீரிணையில் PKFB 1269 மற்றும் PKFB 1280 பதிவு கொண்ட மலேசியக் கொடியுடன் கூடிய இரண்டு படகுகள் தடுத்து வைக்கப்பட்டதாக கடல் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒழிப்பதற்கும் கடல் மற்றும் மீன்வளத்தை பாதுகாப்பதற்கும் நாங்கள் கடைபிடிக்கும் உறுதியான நிலைப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என்று அதன் கடல் மற்றும் மீன் வள கண்காணிப்பு இயக்குனர் ஜெனரல் அடின் நுரவாலுதீன் கூறினார்.
படகுகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேல் விசாரணைக்காக வடக்கு சுமத்ராவின் மேடானில் உள்ள பெலவான் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டு இதுவரை 79 வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சட்ட விரோத படகுகளை இந்தோனேசியா தடுத்து வைத்துள்ளது, இதில் எட்டு மலேசிய படகுகளும் அடங்கும்.


