ஷா ஆலம், ஜூன் 13: பக்காத்தான் ஹராப்பான் மக்களவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி, கட்சி தாவல் தடுப்பு மசோதாவை விவாதிக்க அரசாங்கம் தவறியதால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறினர்.
இருந்த போதிலும், வரும் ஜூலை 18ஆம் தேதி தொடங்கும் மக்களவை கூட்டத் தொடரின் முதல் வாரத்தில் இந்த மசோதாவை தாக்கல் செய்து, விவாதித்து, ஒப்புதல் பெற முடியும் என்று ஹராப்பான் தலைவர்கள் குழு நம்புகிறது.
“இந்த மசோதாவை அங்கீகரிப்பதன் மூலம், ஹராப்பானுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்ஓயு) 18 அம்சங்களில் 15 நிறைவேற்றப்படும்.
"இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்னும் செயல்படுத்தப்பட வேண்டிய மூன்று விஷயங்கள், பிரதமருக்கு இரண்டு கால அல்லது 10 ஆண்டு கால ஆட்சி வரம்பை நிர்ணயித்தல், நாடாளுமன்ற சேவை மசோதாவை தாக்கல் செய்தல் மற்றும் மக்களவை கூட்டத்தின் விதிகளை திருத்துதல்" என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெஅடிலான் மக்கள் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பார்ட்டி அமானா நெகாரா (அமானா) தலைவர் முகமது சாபு, டிஏபி பொதுச்செயலாளர் அந்தோனி லோக் சியூ ஃபூக் மற்றும் கினாபாலு முற்போக்கு ஐக்கிய அமைப்பின் (உப்கோ) தலைவர் டத்தோஸ்ரீ வில்பிரட் மதியுஸ் ஆகியோர் இந்த அறிக்கையை வெளியிட்டனர்.
அறிக்கையின்படி, ஹராப்பானின் உயர்மட்டத் தலைமை பிரதமருடன் உடனடி சந்திப்பை நடத்தி, கட்சி தாவல் தடுப்பு மசோதா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள விஷயங்கள் குறித்து விவாதிக்கும்.


