பாசீர் மாஸ், ஜூன் 13- துரித பொருள் பட்டுவாடா லோரியைப் பயன்படுத்தி 11 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 21,600 போத்தல் மின் சிகிரெட் (வேப்) திரவத்தை கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியை பொது நடவடிக்கை பிரிவின் 8வது பட்டாளம் முறியடித்தது.
கடந்த சனிக்கிழமை நண்பகல் தும்பாட், போஸ் சிம்பாங்கானில் மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் வாவாசான் நடவடிக்கையின் போது தாங்கள் அந்த லோரியை தடுத்து நிறுத்தி 34 வயதுடைய ஒட்டுநரை கைது செய்ததாக பொது நடவடிக்கை பிரிவின் தென்கிழக்கு படைப்பிரிவு துணை கமாண்டர் ஏசிபி ஹக்கிமல் ஹவாரி கூறினார்.
அந்த லோரியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பல்வேறு வகை நறுமணங்களைக் கொண்ட வேப் திரவங்கள் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த பொருள்களின் பெறுநர் தாம் என்பதை 20 வயது இளைஞர் ஒருவர் ஒப்புக் கொண்டதாகவும் அவர் சொன்னார். அந்த லோரியும் அவ்விரு ஆடவர்களும் மேல் விசாரணைக்காக தும்பாட் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு நிலவரத்தில், இப்படைப் பிரிவினர் தும்பாட், கம்போங் துவாலாங், பெங்காலான் ஹராம் போக் லெ பகுதியில் 220,000 வெள்ளி மதிப்புள்ள 8,800 மின்சிகிரெட்டுகளை கைப்பற்றினர்.
மாலை 3.30 மணியளவில் இரு ஆடவர்கள் சில பெட்டிகளை படகொன்றில் ஏற்றிக் கொண்டிருப்பதை தமது அதிகாரிகள் கண்டதாக ஹக்கிமல் சொன்னார். எனினும் தங்கள் வருகையை உணர்ந்த அவ்விரு ஆடவர்களும் படகு மூலம் அண்டை நாட்டிற்கு தப்பியோடி விட்டனர் என்றார் அவர்.


