ECONOMY

ஆசிய கிண்ண கால்பந்து- பாஹ்ரினிடம் 2-1 கோல் கணக்கில் மலேசியா தோல்வி

12 ஜூன் 2022, 4:36 AM
ஆசிய கிண்ண கால்பந்து- பாஹ்ரினிடம் 2-1 கோல் கணக்கில் மலேசியா தோல்வி

ஷா ஆலம், ஜூன் 12- இங்குள்ள புக்கிட் ஜாலில் அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண தகுதிச் சுற்று “இ“ பிரிவின் இரண்டாம் ஆட்டத்தில் பாஹ்ரின் அணியிடம் மலேசியா 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

இந்த தோல்வியினால் இ பிரிவின் வெற்றியாளர் தகுதியை பாஹ்ரின் நாட்டிடம் ஹரிமாவ் மலாயா குழு இழக்க நேர்ந்தது. மேலும், பாஹ்ரின் நாட்டிற்கு இந்த வெற்றியின் மூலம் ஆறு புள்ளிகள் மொத்தமாக கிடைத்தன.

ஆட்டம் தொடங்கியது முதல் பாஹ்ரின் அணியின் கோல் முனையில் இடைவிடாத தாக்குதலை நடத்திய ஹரிமாவ் மலாயா குழு ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் முகமது சுமேரா மூலம் தனது முதல் கோலை புகுத்தியது.

எனினும், மலேசியா அணியின் இந்த வெற்றிக் களிப்பு வெகு நேரத்திற்கு நீடிக்கவில்லை. அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே அலி ஹராம் மூலம் பாஹ்ரின் கோலை புகுத்தி 1-1 என்ற கோல் சமநிலையை ஏற்படுத்தியது.

ஆட்டத்தின் கடைசி பத்தாவது நிமிடத்தில் மலேசிய அணியின் கோல் காவலர் ஃபரிசால் மர்லியாஸ் எதிரணி ஆட்டக்காரர் அப்துல்லா யூசுப் ஹெலாலிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதைத் தொடர்ந்து அவ்வணிக்கு நடுவர் பெனால்டி வாய்ப்பை வழங்கினார். பாஹ்ரின் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கோல் எண்ணிக்கையை 2 ஆக உயர்த்தி வெற்றிக் கனியைப் பறித்தது.

இந்த தோல்வியின் வழி மலேசியா துர்க்மேனிஸ்தானை தோற்கடித்ததன் மூலம் கிடைத்த 3 புள்ளிகளுடன் “இ“ பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆசிய கிண்ணத்திற்கு தேர்வு பெற அக்குழு தனது இறுதியாட்டத்தில் வங்காளதேசத்தை வென்றாக வேண்டும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.