கோலாலம்பூர், ஜூன் 10- உலகளாவிய நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு கண்ட போதிலும் பொது மக்களுக்கு எரிபொருளுக்கான உதவித் தொகையை வழங்கும் அளவுக்கு அரசிடம் போதுமான நிதிவளம் உள்ளது.
அரசாங்கத்திடம் போதுமான அளவு பணம் உள்ளதோடு மக்களுக்கு குறிப்பாக உதவித் தேவைப்படும் தரப்பினருக்கு அது தொடர்ந்து உதவி வரும் என்று நிதியமைச்சர் டத்தோஸ்ரீ துங்கு ஜப்ருள் அப்துல் அஜிஸ் கூறினார்.
இவ்வாண்டிற்கான நமது பணவீக்க இலக்கு நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் 2.3 விழுக்காடு முதல் 3.3 விழுக்காட்டிற்குள் இருக்கும் என்றார் அவர்.
எனினும், உதவித் தொகைக்கான இலக்கை செயல்படுத்துவதற்கான நீண்ட கால நடவடிக்கைகளில் ஒன்றாக விளங்கும் உலகளாவிய எண்ணெய் விலையை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் ஏற்கனவே கூறியது போல் இவ்வாண்டிற்கான உதவித் தொகையின் மதிப்பு 7,000 கோடி வெள்ளியை எட்டும். இதில் எண்ணெய்க்கான உதவித் தொகை மட்டும் 3,000 கோடி வெள்ளியாக இருக்கும். எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் மதிப்பீட்டைச் செய்கிறோம். கடந்த மே மாதத்தில் மட்டும் எண்ணெய்க்கான உதவித் தொகை 500 கோடி வெள்ளியை எட்டி விட்டது என்றார் அவர்.
நிலைமை எவ்வாறாக இருந்தாலும் அரசாங்கம் உதவித் தொகைக்கு தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து வரும். உதவித் தொகையின் வாயிலாக நாம் மக்களுக்கு தொடர்ந்து உதவ முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


