பேங்காக், ஜூன் 10- கஞ்சா செடிகளை வளர்ப்பது அதனை உட்கொள்வது மற்றும் அருந்துவது ஆகியவை தாய்லாந்தில் நேற்று தொடங்கி சட்டப்பூர்வமாக்கப்பட்டு விட்டன.
இதன் வழி கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கிய ஆசியாவின் முதல் நாடாக தாய்லாந்து விளங்குகிறது. எனினும், கஞ்சாவை புகைப்பதற்கான தடை இன்னும் நீடிக்கிறது.
விவசாயத் துறை மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ராயட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
கஞ்சா கலந்த பானங்கள், இனிப்பு வகைகள் மற்றும் இதரப் பொருள்கள் விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது. போதைப் பொருளுக்கு எதிரான கடும் சட்டத்தை நீண்ட காலமாக அமல்படுத்தி வரும் அந்நாட்டின் இந்த சீர்திருத்த நடவடிக்கையை மக்கள் பெரிதும் வரவேற்றனர்.
சட்டப்பூர்வமாக்கப்பட்ட கஞ்சாவை முதல் ஆளாக வாங்குவதற்கு தாம் கடந்த புதன் கிழமை முதல் காத்திருந்ததாக ரித்திபோங் டக்குள் (வயது 24) என்ற ஆடவர் கூறினார்.
இனி கஞ்சா சார்ந்த பொருள்கள் எளிதாக கிடைக்கும். அந்த பொருளின் மூலம் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. அதன் தரம் பற்றியும் எங்களுக்குத் தெரியாது என்று அவர் சொன்னார்.
உடல் வலி மற்றும் சோர்வை போக்குவதற்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் கஞ்சாவை மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்த தாய்லாந்து அரசாங்கம் கடந்த 2018 ஆம் ஆண்டில் அனுமதி வழங்கியது.
கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வணிகம் தங்களுக்கு அவசியம் தேவைப்படுவதாக வணிகர்கள் கூறினர்.


