கோலாலம்பூர், ஜூன் 10- உலகின் தலைசிறந்த பள்ளிக்கான விருதுக்கு இறுதி செய்யப்பட்ட பத்து பள்ளிகளில் மலேசியாவின் இரு அறக்கட்டளைப் பள்ளிகளும் தேர்வாகியுள்ளன.
புத்தாக்கப் பிரிவில் குவாந்தான், கெம்பாடாங் தேசிய பள்ளி தேர்வான நிலையில் சவால்களை எதிர்கொள்வது தொடர்பான பிரிவில் கிள்ளான் ,கம்போங் ஜாவா தேசிய இடைநிலைப்பள்ளி தேர்வு பெற்றுள்ளது.
யாயாசான் ஹசானா அறவாரியம், டெம்ப்ளெட்டன் உலக சமூக நல அறக்கட்டளை, அக்சென்ஷர் அண்ட் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இவ்வாண்டு தொடங்கப்பட்ட இந்த விருதளிப்பு திட்டம் வெற்றியாளர்களுக்கு மொத்தம் 250,000 அமெரிக்க டாலரை பரிசாக வழங்குகிறது.
இந்த உலக சிறந்த பள்ளிக்கான விருது நிகழ்வு சமூக ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் நடவடிக்கை, புத்தாக்கம், சாவல்களை எதிர்கொள்வது மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்கு ஆதரவளிப்பது ஆகிய ஐந்து பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் நிலையில் வெற்றி பெறும் பள்ளிகளுக்கு தலா 50,000 அமெரிக்க டாலர் வழங்கப்படும். வரும் அக்டோபர் மாதம் 16 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் உலக கல்வி வாரத்தின் போது இப்போட்டிக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


