ஷா ஆலம், ஜூன் 10- இவ்வாண்டு மலேசியா விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பெறுவதை சிலாங்கூர் விளையாட்டு மன்றம் (எம்.எஸ்.என்.) இலக்காக கொண்டுள்ளது.
இம்முறை சுக்மா விளையாட்டுகள் முன்பு திட்டமிடப்பட்டதைக் காட்டிலும் இரு வாரங்கள் முன்னதாக நடைபெறுகின்ற போதிலும் மாநில விளையாட்டாளர்கள் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்துவர் எனத் தாங்கள் நம்புவதாக எம்.எஸ்.என். நிர்வாக இயக்குநர் முகமது நிஸாம் மர்ஜூக்கி கூறினார்.
வரும் செப்டம்பர் 16 முதல் 24 வரை நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த 20 வது சுக்மா போட்டி மலேசிய தினக் கொண்டாட்டங்கள் காரணமாக இரு வாரங்கள் முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.
இந்த சுக்மா போட்டியில் இடம் பெறும் 31 விளையாட்டுகளில் மாநிலத்தைப் பிரதிநிதித்து மொத்தம் 500 விளையாட்டாளர்கள் பங்கேற்பர் என்று முகமது நிஸாம் தெரிவித்தார்.
அனைத்து விளையாட்டுகளுக்கும் நாங்கள் போட்டியாளர்களை அனுப்ப விரும்புகிறோம்.
எனினும், ஆட்டத் திறன் மற்றும் நடப்புச் சூழலைப் பொறுத்த முடிவெடுக்கப்படும். தகுதி இல்லாத விளையாட்டாளர்களை அனுப்ப நாங்கள் விரும்பவில்லை என்றார் அவர்.
சுக்மா போட்டிக்கான தேதியில் ஏற்பட்ட கடைசி நேர மாற்றம் பயிற்சிக்கான காலத்தைக் குறைத்து விளையாட்டாளர்களின் முன்னேற்பாடுகளைப் பாதிக்கும் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.


