சிங்கப்பூர், ஜூன் 9- இவ்வாண்டிற்கான ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 மலேசியர்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு கடந்தாண்டை விட 10 விழுக்காடு குறைந்து 8,050 கோடி டாலராக உள்ளது.
இந்த பணக்காரர்கள் பட்டியலில் குவோக் குழுமத்தின் நிறுவனர் டான்ஸ்ரீ ரோபர்ட் குவோக் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறார். எனினும், அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 பணக்காரர்களின் சொத்து மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் ஆசியா கூறியது.
பணக்காரர்களின் முழு பட்டியலை என்ற அகப்பக்கம் வாயிலாகவும் ஃபோர்ப்ஸ் ஆசியாவின் சஞ்சிகையின் ஜூன் மாத பதிப்பிலும் காணலாம்.
கடந்தாண்டில் 1,220 கோடி அமெரிக்க டாலராக இருந்த நாட்டின் செல்வந்தர் பட்டியில் நீண்ட காலமாக முதலிடம் வகித்து வரும் குவோக்கின் சொத்து மதிப்பு இவ்வாண்டில் 1,100 கோடி டாலராக குறைந்துள்ளது.
ஹோங் லியோங் நிறுவனத்தின் தலைவர் டான்ஸ்ரீ குவேக் லெங் சான் 1,010 டாலர் மதிப்புள்ள சொத்துகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அலுமினியத் தொழில் ஜாம்பவானான பிரஸ் மெட்டல் நிறுவன உரிமையாளர் டான்ஸ்ரீ கூன் போ கியோங் மற்றும் அவரின் சகோதரர்கள் 620 கோடி சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர்.
பப்ளிக் பேங்க் நிறுவனர் டான்ஸ்ரீ தே ஹோங் பியாவ் 570 கோடி டாலர் சொத்துகளுடன் நான்காம் இடத்திலும் மேக்சிஸ் மற்றும் பூமி அர்மாடா நிறுவனங்களின் உரிமையாளர் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் 500 கோடி டாலர் சொத்துகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.


