கோல பிலா, ஜூன் 9- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் ரெம்பாவ் அருகே கடந்த ஞாயிறன்று நிகழ்ந்த ஐந்து கார்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கு காரணமான வேலையில்லா நபர் மீது கஞ்சா வைத்திருந்ததாக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி காலை 10.25 மணியளவில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 242.9 வது கிலோ மீட்டரில் மைவி ரகக் காரில் 3.39 கிராம் எடை கொண்ட கஞ்சா என சந்தேகிக்கப்படும் காய்ந்த இலைகளை வைத்திருந்தாக முன்ஸிர் அஸ்மீர் ரஹிம் (வயது 28) என்ற அந்த நபர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 20,000 வெள்ளிக்கும் மேற்போகாத அபராதம், ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 6 வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கப்படக்கூடாது என்ற அரசு தரப்பு வழக்கறிஞர் யாப் சூ செங் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கு விசாரணை வரும் ஜூன் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


