கோலாலம்பூர், ஜூன் 9- இங்குள்ள புக்கிட் ஜாலில் அரங்கில் நேற்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கால்பந்து போட்டிக்கான தேர்வாட்டத்தில் பலம் பொருந்திய துர்க்மேனிஸ்தான் குழுவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மலேசியா சாதனை படைத்தது.
இந்த போட்டியின் “இ“ பிரிவு தொடக்க ஆட்டத்தில் மலேசியா படைத்த இந்த அதிரடி அரங்கில் கூடியிருந்த சுமார் 21,000 ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு அதாவது கோவிட்-19 நோய்த் தொற்று பரவலுக்கு பின்னர் அரங்கில் கூடி கால்பந்தாட்டத்தை ரசிக்கும் வாய்ப்பு மலேசிய ரசிகர்களுக்கு இப்போதுதான் முதன் முறையாக கிட்டியது.
நேற்றைய ஆட்டத்தில் மலேசிய அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி வந்ததோடு எதிர் அணியின் அரண் மீது இடைவிடாத தாக்குதலையும் மேற்கொண்டவண்ணம் இருந்தது.
முதல் பாதி ஆட்டத்தின் 15 நிமிடத்தில் முதலாவது கோலை புகுத்திய மலேசியா அடுத்து ஒரு நிமிடத்தில் இரண்டாவது கோலையும் செலுத்தி தனது வெற்றியை பலப்படுத்திக் கொண்டது.
ஆட்டத்தின் 38 வது நிமிடத்தில் மலேசியாவின் தற்காப்பு அரணைத் தாண்டி துர்மேனிஸ்தான் குழு தனது முதலாவது கோலை புகுத்தியது. மலேசியா கோர்பின் ஓங் மூலம் தனது மூன்றாவது கோலை போட்டு மலேசியாவை வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தது.
கால்பந்தாட்டத்தைப் பொறுத்த வரை அனைத்துலக தர வரிசையில் துர்க்மேனிஸ்தான் 134வது இடத்திலும் மலேசியா 154 வது இடத்திலும் உள்ளன.


