கோலாலம்பூர், ஜூன் 8- இன்று நடைபெறும் 2023 ஆசிய கிண்ண கால்பந்து தேர்வாட்டத்தின் போது ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போலீசார் புக்கிட் ஜாலில் அரங்கில் காவல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் மலேசியாவை துர்க்மேனிஸ்தானும் வங்காளதேசத்தை பாஹ்ரினும் சந்தித்து ஆடவுள்ள நிலையில் இவ்விரு ஆட்டங்களைக் காண சுமார் 85,000 ரசிகர்கள் அரங்கில் திரள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ஹசானி கசாலி கூறினார்.
அரங்கில் பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளையில் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதையும் காவல் துறையினர் உறுதி செய்வர். மேலும், பொது மக்களின் வசதிக்காக மாலை 4.00 மணி தொடங்கி அப்பகுதியில் சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் பணியிலும் அவர்கள் ஈடுபடுவர் என அவர் தெரிவித்தார்.
இந்த நான்கு நாடுகளின் அணிகளுக்குமிடையே வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இரண்டாம் சுற்று ஆட்டத்தின் போதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தடை செய்யப்பட்ட பொருள்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள பட்டாசுகள், வாண வெடிகள், கவசத் தொப்பி, கூர்மையான பொருள்கள், ஆயுதங்கள், மதுபானங்கள், குடை ஆகியவற்றை அரங்கினுள் கொண்டு வரக்கூடாது எனவும் அவர் நினைவுறுத்தினார்.
அரங்க வளாகத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாக பொது போக்குவரத்து சேவையைப் பயன்படுத்துமாறு ரசிகர்களைக் கேட்டுக் கொண்ட அவர், வாகனமோட்டிகள் விளையாட்டரங்கைச் சுற்றியுள்ள சாலைகளைத் தவிர்க்கும் அதே வேளையில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.


